தமிழோவியத்தில் பதிப்பிக்கப்பட்டது
கடந்த 15 வருடங்களைத் தவிர்த்து தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இதில் எம்ஜியாரையும் சிவாஜியையும் விட்டு விடலாம் !
கமலும் ரஜினியும் இணைந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தனர். நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவர்கள் என்று பல திரைப்படங்களை சுட்டிக் காட்டலாம். இம்மாதிரி இரு வித்தியாசமான நடிகர்கள் இணைவது சாத்தியப்படும்போது, கதாசிரியர் நல்ல கதைக்களனை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது வெளிவரும் பல திரைப்படங்கள், அவற்றில் நடிக்கும் கதாநாயகருக்காக உருவாக்கப்பட்டு, நாலு பாட்டு, நாலு ·பைட், ஒரு அயிட்டம் டான்ஸ் (வட இந்திய இறக்குமதி பெரும்பாலும்!), வெறுப்பேத்தும் நகைச்சுவை, அலுப்பூட்டும் வில்லத்தனம் என்கிற கட்டுக்குள் அடங்கி விடுகிறது. இத்தகைய சூழலில், நல்ல கதையம்சம் இல்லாத படங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க ஏது வாய்ப்பு ? சங்கர், பாலா (என்றென்றும் அன்புடன் அல்ல!), மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடமிருந்து வித்தியாசமான கதையுடன் கூடிய நல்ல படங்கள், சில சமயம் நமக்குக் கிடைக்கின்றன.
அக்காலத்தில், பிரபல நாயகர்கள் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது கண்டு அஞ்சாமல், போட்டி போட்டு நடித்து அவரவர் முத்திரையை பதித்தனர். ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால், ஈகோ அவ்வளவாக இல்லை எனக் கூறலாம். இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டால் (அதில் ஒன்று சுமாராக ஓடியும் விட்டால்!) அந்த நடிகர் யாருடனும் சேர்ந்து நடிக்க மாட்டார் !!! அவருக்கேத்த கதையை உற்பத்தி செய்ய வல்ல இயக்குனருக்காக அலைய ஆரம்பிப்பார் !
உதாரணத்துக்கு, சிம்புவையும், தனுஷையும் (அல்லது விஜயையும், அஜித்தையும்) எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இணைந்து நடிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றல்லவா ? வித்தியாசமான நடிகர்கள் இணையும்போது, நல்லதோர் கதைக்களன் அமைவதும், நல்ல திரைப்படங்கள் வெளிவருவதும் சாத்தியமாகின்றன. இப்போதிருக்கும் நாயகர்கள் தனித்தனி தீவுகளாக உலா வருகிறார்கள். அதனாலேயே, அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான (STEREOTYPE) படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும் !
ரஜினியும் சிவகுமாரும் சேர்ந்ததால் தான், 'புவனா ஒரு கேள்விக்குறி' என்ற வித்தியாசமான திரைப்படம் கிடைத்தது ! கமலும் ரஜினியும் இணைந்ததால் தான், ஒரு 'அவர்கள்' உருவானது ! சிவாஜியும் கமலும் சேர்ந்ததால், ஒரு 'தேவர் மகன்', சிவாஜியும் ஜெமினியும் இணைந்ததால் ஒரு 'பாசமலர்', முத்துராமனும் ரவிச்சந்திரனும் இணைந்ததால் ஒரு 'காதலிக்க நேரமில்லை', கார்த்திக்கும் பிரபுவும் சேர்ந்ததால் ஒரு 'அக்னி நட்சத்திரம்' என்று பலவற்றைக் கூறலாம் !
அப்போதெல்லாம் சிவாஜி, SSR, பாலாஜி, ஜெமினி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சிவகுமார் என பலரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து பல தரமான படங்களை தந்துள்ளனர். அதோடு இக்காலத்தில், ரங்காராவ், சுப்பையா, நாகையா, பாலையா, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் போல குணச்சித்திர நடிப்பில் தனித்துவத்தோடு பரிமளிக்கும் நடிகர்கள் ஓரிருவரே உள்ளனர் என்பதும் பெருங்குறையே !!!
ஹிந்தி திரைப்படங்களில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று, இயக்குனர்களுக்கு அங்கு நல்ல மதிப்பு எப்போதும் உள்ளது. இரண்டு, பாலிவுட் நடிகர்கள் தங்களை தனித் தீவுகளாக எண்ணிக் கொள்வதில்லை. அந்தக்கால ராஜ்கபூர், ராஜேந்திரகுமார், சுனில்தத், திலீப்குமார், பால்ராஜ் சஹானி, கிஷோர்குமார் முதல், அடுத்து வந்த சஞ்சீவ்குமார், தர்மேந்திரா, அமிதாப், ராஜேஷ்கன்னா, வினோத்கன்னா, சசிகபூர் ஆகியோரும், அதன் பின்னர் வந்த ரிஷிகபூர், அனில்கபூர், ஜாக்கிஷ்ரா·ப், நசுருதீன் ஷா, நானாபடேகர், சன்னிதியோல், சஞ்சய்தத் ஆகியோரும், தொடர்ந்து வந்த அமீர்கான், சல்மான்கான், ஷாருக், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன் ஆகியோரும், இன்றைய இளம் நாயகர்களான பாபிதியோல், ரித்திக்ரோஷன், விவேக்ஓபராய் வரை, அந்தந்த கால கட்டங்களில் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ரஜினியை விடுத்து, சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விக்ரம், அர்ஜுன், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், சிம்பு, தனுஷ் என்று பலரும் இணைந்து நடிக்கத்தக்க சூழலை வரவேற்க வேண்டும், உருவாக்க வேண்டும் ! இல்லையென்றால், கிராமத்து 'ஐயா' சரத்குமார், அனல் வசன 'கேப்டன்' விஜயகாந்த், கோபக்கார அஜித், காதலில் மென்மையும், சண்டையில் ஆண்மையும் காட்டும் விஜய், அடிதடி அர்ஜுன், நக்கல்/காமெடி சத்யராஜ், எகத்தாள சிம்பு, பரிதாப தனுஷ் நடிக்கும் படங்களைப் பார்த்து அலுத்து நம் வாழ்க்கை முடிந்து விடும் ! தமிழ்த் திரைப்படச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்படாது !
இப்போதைய நடிகர்களில், விக்ரம், கமல் மட்டுமே வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பால் மெருகூட்ட சிரத்தை எடுக்கின்றனர். யோசித்துப் பார்த்தால், ஒரு இந்தியனும், ஒரு சேதுவும், ஒரு அன்பே சிவமும், ஒரு பிதாமகனும் கோலிவுட்டில் எடுக்கப்பட்டவை தான் !!! என்ன, இவற்றுக்கு இடையில் தயாரிக்கப்படும் குப்பைகள் ஏராளம் !!! அது தான் பிரச்சினையே !
என்றென்றும் அன்புடன்
பாலா